மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்து மகனைப்பார்த்து கதறி அழுத பெற்றோர், தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முடிவு செய்தனர்.
அதன்படி கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சந்திரமோகன் என்பவருக்கு கல்லீரலும், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனேவை சேர்ந்த பாவுராவ் நகாடி என்பவருக்கு இதயமும் தேவைப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் திருச்செல்வத்தின் இதயம், கல்லீரலை பத்திரமாக அகற்றி ஆம்புலன்ஸ் மூலம், கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
இந்த நிலையில், இன்று காலை கல்லீரல் மற்றும் இதயத்துடன் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. அந்த ஆம்புலன்ஸ் முன்பு போலீஸ் வாகனம் சைரன் ஒலித்தவாறு சென்றது.
திட்டமிட்ட படி, ஆம்புலன்ஸ் வாகனம் புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது. இன்று மதியத்திற்குள் ஆம்புலன்ஸ் உரிய இடத்தை சென்றடையும் என்றுத் தெரிவிக்கப்பட்டது.