மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3500 ஏக்கர் உப்பளங்கள் உள்ளது. இதிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மரக்காணம் உப்பு உற்பத்தியில் தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இத்தொழிலை நம்பி இப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் துவங்கும் உப்பு உற்பத்தி அக்டோபர், நவம்பர் மாதங்கள் வரை நடைபெறும்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெய்த பருவ மழையால் இப்பகுதியில் இருந்த உப்பளங்கள் நீரில் மூழ்கி விட்டது. இதனால் உப்பு உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்பட்டது. தற்பொழுது மழைநீர் வடிந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இங்கு உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகளான பாத்திகள் அமைத்தல், பாத்திகளை பதப்படுத்துதல் போன்ற முதல்கட்ட பணிகளை செய்து வருகின்றனர். அடுத்த வாரம் முதல் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.