கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு பல காரணங்கள் உண்டு. தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற துடித்து கொண்டிருக்கும் சூழலில் அதன் கைவசம் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா. எனவே தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல்
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக 104,
காங்கிரஸ்
80, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை. ஆனால் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டது. மேலும் பல்வேறு குழப்பங்கள் உண்டானது.
பாஜக ஆட்சியில் சர்ச்சைகள்
முதலில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்து, பின்னர் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இதன் பின்னால் பல்வேறு உள்ளடி வேலைகள் நடந்தது வேறு கதை. கடந்த 4 ஆண்டுகால பாஜக ஆட்சியில் அரசு டெண்டர்கள், ஹிஜாப், மதமாற்ற தடை சட்டம், பெங்களூரு உள்கட்டமைப்பு கோளாறுகள் என பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.
சாதி ரீதியான கணக்குகள்
இதற்கு மத்தியில் பாஜக எப்படி ஆட்சியை பிடிக்க போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. வழக்கம் போல் லிங்காயத்து, ஒக்கலிகா, கவுடா என சாதி ரீதியிலான அரசியல் கணக்குகள் போடத் தொடங்கி விட்டனர். இந்த சூழலில் பாஜகவின் பிளான் ‘B’ குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் ‘5B’ பிளான் எனக் குறிப்பிடலாம்.
பின்னடைவு ஏற்படுத்திய மாவட்டங்கள்
இதுதொடர்பாக சமீபத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதாவது Bல் தொடங்கும் 5 மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்துவது. இங்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இம்முறை எப்படியாவது அதிக இடங்களில் வென்று விட வேண்டும் என விரும்புகிறது. அதில் பெங்களூரு, பெலகாவி, பாகல்கோட், பிடார், பெல்லாரி ஆகிய ஐந்து மாநிலங்கள் அடங்கும்.
ரகசிய திட்டங்கள்
இவ்வாறு கடந்த 2018 சட்டமன்ற தேர்தல் கள நிலவரம் அமைந்தது. மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மொத்தம் 72 தொகுதிகள் வருகின்றன. இதில் பாஜக 30, காங்கிரஸ் 37, மதச்சார்பற்ற ஜனதா தளம் 5 என வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சியை விட பாஜக பின்தங்கி காணப்பட்டது. இந்த நிலையை மாற்ற அக்கட்சி மும்முரம் காட்டி வருகிறது. 2023 சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க இந்த ’5B’ மாவட்டங்களில் போதிய பலம் பெற்றுவிட ரகசிய திட்டங்கள் களமிறக்கி விடப்பட்டுள்ளன.