அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இன்றும் நாளையும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அதேபோல முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவு கட்சி தலைவர்கள் பலரும் பிரச்சார மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு நாள் பிரச்சாரம்:
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அத்தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர் சாலை மார்க்கமாக ஈரோடு புறப்படுகிறார். 

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்:
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொலுசு கொடுப்பதாக முன்வைக்கப்படும் கருத்துக்கு, மக்கள் தெளிவான முடிவில் இருக்கிறார்கள் என பதில் அளித்தார். மேலும் திமுகவினர் மக்களை அடைத்து வைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு வைப்பது குறித்த கேள்விக்கு, அவ்வாறு எதுவும் இல்லை என்றார். 

கமலஹாசன் பிரச்சாரம்:
கமலஹாசனின் பிரச்சாரத்திற்கு வந்த பொதுமக்கள் கூட்டம் வாக்குகளாக மாறாது என அதிமுக கட்சியினர் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, பொறுத்திருந்து பார்க்கலாம் என பதிலளித்தார்.  

அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம்:
சட்டம் ஒழுங்கு குறித்து அண்ணாமலை இடம் கேள்வி கேளுங்கள் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது கேள்வி எழுப்பினார்.

இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகள்:
குமலன்குட்டை கணபதி நகா், அம்பேத்கா் அடுக்குமாடி குடியிருப்பு, நாராயணவலசு, முனிசிபல் காலனி கலைஞா் சிலை, பழனிமலை வீதி, கமலா நகா், பம்பிங் ஸ்டேசன் ரோடு, வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம், அக்ரஹாரம், காந்தி நகரில் இன்று (திங்கள்கிழமை) பிரசாரத்தில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகள்:
ஈரோடு எஸ்கேசி சாலையில் தொடங்கி மணல்மேடு, ஆலமரத்துசேரி சாலை, சமாதானம்மாள் சத்திரம், காமாட்சி காடு வழியாக கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.