குஜராத் திருமண விழாவில் மாடியில் இருந்து ரூ.500 நோட்டுகளை அள்ளி வீசிய மணமகன் வீட்டார்

அகமதாபாத்: குஜராத்தின் மெக்சனா மாவட்டம், காதி தாலுகா, அகோல் கிராமத்தை சேர்ந்தவர் கரீம் யாதவ். இவரது தம்பி ரசூல் யாதவ். கரீம் யாதவ் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது. தம்பி ரசூல் யாதவுக்கு ரசாக் என்ற மகன் உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசாக்குக்கு சொந்த ஊரில் திருமணம் நடைபெற்றது. குடும்பத்தின் ஒரே வாரிசு என்பதால் அவரது திருமணத்தை விமரிசையாக நடத்தினர். மணமகனின் வீட்டுக்கு புதுமண தம்பதி வந்த போது, கரீம் யாதவ், ரசூல் யாதவ் குடும்பத்தினர் தங்களது வீட்டின் முதல் மாடி, 2-வது மாடியில் இருந்து ரூபாய் நோட்டுகளை வாரியிறைத்தனர். 100 ரூபாய் நோட்டுகள், 500 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து தரையில் சிதறி விழுந்தன.

திடீரென பண மழை பெய்ததால் கிராம மக்கள் திரண்டு வந்து ரூபாய் நோட்டுகளை முடிந்தவரை அள்ளினர். மணமகனின் குடும்பத்தினர் பல லட்சம் ரூபாய் நோட்டுகளை வாரியிறைத்து மக்களை திக்கு முக்காட செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குடும்பத்தின் ஒரே வாரிசு

இதுகுறித்து மணமகன் ரசாக் குடும்பத்தினர் கூறும்போது, ‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் வல்சாத் பகுதியில் அறக்கட்டளை நிகழ்ச்சிக்காக பலர் பணத்தை வாரியிறைத்தனர். அப்போது ரூ.50 லட்சம் வரை பணம் சேகரிக்கப்பட்டது. எங்களது குடும்பத்தின் ஒரே வாரிசு ரசாக். அவரது திருமணத்தை எங்கள் கிராமம், குஜராத் மாநிலம் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடும் அறிய வேண்டும் என்பதற்காக திருமண விழாவில் பண மழை பொழிந்தோம்’’ என்றனர்.

— Shubhankar Mishra (@shubhankrmishra) February 18, 2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.