மும்பை: சிவசேனா கட்சிப் பெயர் மற்றும் அதன் சின்னத்தைப் பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார். இதை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு மறுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இந்நிலையில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினர். இதனால் உத்தவ் அரசு கவிழ்ந்தது.
தனி அணியாக செயல்பட்ட ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தனர். இதில் ஷிண்டே முதல்வராகவும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அத்துடன், கட்சிப் பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரி உத்தவ் தரப்பும் ஷிண்டே தரப்பும் தலைமை தேர்தல் ஆணையத்தை நாடின. இந்த மனுக்களை விசாரித்த ஆணையம், கட்சிப் பெயரும் கட்சியின் வில்-அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கே சொந்தம் என கடந்த வாரம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே ஆதரவாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “சிவசேனா கட்சிப் பெயர் மற்றும் அதன் சின்னத்தைப் பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இது முதற்கட்டமான தொகைதான். ஆனால் 100 சதவீதம் உண்மை. இது தொடர்பான மேலும் பல தகவலை விரைவில் வெளியிடுவேன். நாட்டின் வரலாற்றில் இதுபோன்று இதுவரை நடந்ததே இல்லை” என நேற்று பதிவிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ. சதா சர்வங்கர், “சஞ்சய் ராவத் என்ன காசாளரா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.