பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாததால் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் – ப.சிதம்பரம்

பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் வேலை கிடைக்கிறது என்று இங்கே வருகிறார்கள், தமிழகத்தில் இருந்து எவரும் வேலையில்லாமல் அங்கே செல்வதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.ஆர்.ராமசந்திரன், மெய்யநாதன், கீதாஜீவன் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது ப.சிதம்பரம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி அவர்களின் கழுத்தில் பாஜக என்னும் நஞ்சு பாம்பு உள்ளது, தமிழ் மொழி, பண்பாடு, கலச்சாரத்திற்கும், காமராஜர், அண்ணா, பெரியார் உள்ளிட்டோர் வகுத்த கொள்கைகளுக்கும் எதிரான கட்சி பாஜக.
பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாத நிலையில் பிழைக்க வழியில்லாமல் தமிழகத்தில் வேலை கிடைக்கிறது என்று இங்கே வருகிறார்கள், தமிழகத்தில் இருந்து எவரும் வேலையில்லாமல் அங்கே செல்வதில்லை. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதிகளை எல்லாம் மத்திய அரசு தர மறுப்பதை, முன்னாள் முதலமைச்சர் பேசுவதே இல்லை. நீட் விலக்கு வேண்டும் என எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் மௌன சாமியாக உள்ளார்.
image
திமுக தேர்தல் அறிக்கை என்பது 5 ஆண்டுகளுக்கான அறிக்கை, தேர்தல் அறிக்கையை படிப்படியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வரிசைபடி நிறைவேற்றி வருகிறார். கொரோனா நிவாரண தொகை தராத எடப்பாடி அரசு, இந்த அரசை பார்த்து என்ன உதவி தொகை கொடுத்தீர்கள் என்று கேட்பதற்கு எந்த தகுதியும் இல்லை. பெண்கள் உட்பட்ட அனைவரின் மனம் குளிரும் வகையில் தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வரும்.
மத்திய பாஜக ஆட்சியால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவே வஞ்சிக்கப்பட்டுள்ளது, மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் 90 ஆயிரம் கோடி ரூபாய் உணவு மானியத்தையும், உரத்திற்கான மானியத்தில் 60 ஆயிரம் கோடி மானியத்தை வெட்டியுள்ளதால் வரும் நாட்களில் விலைவாசியும், உரவிலையும் உயர வாய்ப்புள்ளது. இதே போல் கல்வி, சுகாதாரம், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட ஏழை எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்களுக்கான நிதியை மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டில் குறைத்துள்ளார்.
நடுத்தர, ஏழை, எளிய மக்களுக்கு எந்த பயனும் தராத பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் உள்ளது என பேசி பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.