நாகர்கோவில்: பறக்கையில் போதியை அறுவடை இயந்திரம் இல்லாமல் அறுவடை செய்ய முடியாமல் பல ஏக்கர் பரப்பளவில் வயல்கள் கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என்று இருபோக சாகுபடி நடக்கிறது. தற்போது கும்பபூ அறுவடை பணிகள் முழுவீச்சில் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்களை கொள்முதல் செய்ய 9 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேல் கொள்முதல் நிலையத்தில் 100 கிலோ நெல் ரூ.2115க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் விவசாயிகளுக்கு போதிய அளவு நெல்லுக்கு விலை கிடைத்து வருகிறது. இதுதவிர வைக்கோல்களையும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த காலங்களில் ஆட்களை வைத்து நெல் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டது. பின்னர் ஆட்கள் பற்றாக்குறை, சம்பளம் உயர்வால் இயந்திரத்தை கொண்டு விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது குமரி மாவட்டத்தில் கும்பபூ அறுவடை முழுவீச்சில் நடந்து வருகிறது. அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1500 வாடகை செலுத்த வேண்டும். இந்த அறுவடை எந்திரங்கள் வேளாண்மை பொறியியல் துறை ஏற்பாட்டில் விடப்படுகிறது. தனியார் மூலமும் இயந்திரங்கள் மூலம் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு வாடகை கொஞ்சம் அதிகமாகும். வேளாண்மை பொறியியல் துறை மூலம் வரும் இயந்திரத்திற்கு முன் பணமாக விவசாயிகள் ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும். அறுவடை முடிந்த பிறகு விவசாயிக்கு வேளாண்மை பொறியியல் துறையால் முன்பணம் திரும்ப வழங்கப்படும். குமரி மாவட்டம் பறக்கை பத்தில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்துள்ளது.
தற்போது அந்த பகுதியில் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. ஆனால் போதிய அறுவை இயந்திரங்கள் இல்லை. இதனால் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகவே போதிய அறுவை இயந்திரங்களை அறுவடை செய்ய பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர். இது தொடர்பாக முன்னோடி விவசாயி பெரிய நாடார் கூறியதாவது:
பறக்கை பத்தில் 2000 ஏக்கர் பரப்பில் கும்பப்பூ அறுவடைப்பணி கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது 3 அறுவை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்டு உள்ளது. நெல் கதிர்கள் முற்றி போய் உள்ளது. போதிய இயந்திரங்கள் இல்லாததால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்பசலனம் ஏற்பட்டு, மழை வரலாம் என்ற அச்சம் எங்கள் மத்தியில் உள்ளது. மழை வந்தால், அனைத்து நெல்மணிகளும் முளைத்து விடும். விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பறக்கை பத்தில் விளைந்த நெல்கதிர்களை அறுவடை செய்ய வேளாண்மை பொறியியல் துறை போதிய அறுவை இயந்திரங்களை ஒதிக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.