திருவள்ளூர்: அதானி குழும மோசடிகள் தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழு விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கோரிக்கை வைத்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவின் 2 நாள் கூட்டம் நேற்று பொன்னேரியில் தொடங்கியது. இதில் பங்கேற்ற காரத் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செயற்கையாக அதானி குழும பங்குகள் உயர்த்தப்பட்டு, பங்குச் சந்தையில் மோசடி வேலைகள் நடந்துள்ளன.
இந்த விவகாரத்தில் செபி, ரிசர்வ் வங்கி ஆகியவை தலையிடவில்லை. இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றமும் பங்கு சந்தையின் சிறுமுதலீட்டாளர்களை பாதுகாப்பதற்காக நிபுணர் குழுவைஅமைக்க மட்டுமே உத்தரவிட்டுள் ளது. ஆனால், அதானி குழும மோசடிகள் குறித்து விசாரிக்க உத்தரவிடவில்லை. எனவேதான் அதானி குழும மோசடிகள் தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழு விசாரிக்க வேண்டும்.
திரிபுராவில், ஆளுங்கட்சி தரப்பில் ஏற்படுத்தப்பட்ட தடைகள், தாக்குதல்களை தாண்டி கிட்டத்தட்ட 90 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள். ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வாக்குகள் விழுந்துள்ளது என்ற சந்தேகத்தால், பாஜகவினர் பதட்ட நிலையில் தாக்குதல்நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் தவறு செய்தவர்களை கைது செய்யவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள 22 மொழிகளையும் அரசுஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்கலாம். அதனை பொதுவான இடத்தில் வைக்கலாம். கடற்கரையில் நினைவு சின்னம் அமைக்க சர்ச்சை நீடித்து வரும் நிலையில் அரசு அந்த பணிகளை தொடரக் கூடாது.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இந்த அறிவிப்பு, தமிழ் மக்கள் மீதான தாக்குதலை ஏற்படுத்த வழி வகுக்கும். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் 3-வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.