வில்லியனூர்: புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன், வில்லியனூரில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி வில்லியனூர் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் நடராஜன் (73). கடந்த 1991 மற்றும் 1996ல் நடந்த தேர்தல்களில் உழவர்கரை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்துள்ளார். அதிமுக மாநில செயலாளராகவும் இருந்துள்ளார். 2006 உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவரானார். இதை தொடர்ந்து 2011ல் என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வில்லியனூர் தொகுதியிலும், 2016 பொதுத்தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் மங்கலம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை நடராஜன் வில்லியனூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் குடும்ப பிரச்னை காரணமாக நடராஜனின் பிள்ளைகள் சொத்தை பிரித்துக் கொண்டு சென்று விட்டதாகவும், கடந்த 19ம் தேதி சொத்து சம்பந்தமாக மகன் தகராறு செய்து, நடராஜனை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.