ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இடைத் தேர்தலுக்கு தடை கோரி மனு!

கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ள நிலையிலும், வாக்களர்களுக்கு பணம் வழங்குவது தொடர்வதாகவும், இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒவ்வொரு தேர்தலின் போதும், பணம் கொடுத்து வாக்கு வாங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், தவறு இழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார்.

பணப்பட்டுவாடாவை தடுக்க சிறப்பு குழு!

தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

தடை விதிக்க வேண்டும்!

இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மனு மீது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை எனவும், தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரியுள்ளார்.

வழக்கு தள்ளுபடி!

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான ஏற்கனவே மற்றொரு வழக்கில் ( நேற்றைய தேர்தல் வழக்கில்) இதுசம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அதே கோரிக்கையில் உத்தரவிட தேவையில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.