ஈரோடு: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டவில்லை என செங்கல்லை காட்டி ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தருமபுரியில் 14 ஆண்டுகள் ஆகியும் திமுக அறிவித்த தொழிற்பேட்டை அமையவில்லை எனக்கூறி பாஜக தலைவர் அண்ணாமலையும் செங்கல்லை காட்டி விளக்கம் அளித்தார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதிக்கு விளக்கம் அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, தருமபுரி தொழிற்பேட்டை அமைக்கப்படாதது குறித்து செங்கல்லை காட்டி ஈரோட்டில் விளக்கம் அளித்தார்.
ஈரோட்டில் நேற்று (பிப்.20) நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி, கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காட்டியதைப் போலவே, செங்கல் ஒன்றை காட்டி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியை இன்னும் மத்திய அரசு கட்டவில்லை என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து நேற்று இரவு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு, 2026- ல் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தெளிவுபடுத்தியுள்ளோம். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டு, 150 மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் இணைத்து படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி செங்கல்லை காட்டி பிரச்சாரம் செய்கிறார்.
மத்தியில் பாஜக, தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது, இது போன்ற ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட செங்கல்களைக் கொண்டு (செங்கல் ஒன்றை காட்டுகிறார்) 11அரசு மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டது. அதில், 1,800 ஏழைக்குழந்தைகள் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கின்றனர். இதை உதயநிதி புரிந்து கொள்ள வேண்டும்.
தருமபுரியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று 2009 தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. 14 ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல்கூட திமுக வைக்கவில்லை. எனவே தேர்தல் முடிந்தவுடன் இந்த செங்கலை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். 2026 எய்ம்ஸ் மருத்துவமனை பணி முடிந்தவுடன் அவரிடம் உள்ள செங்கலை திருப்பி தரட்டும். தர்மபுரி தொழிற்பேட்டை அமைத்துவிட்டு இந்த செங்கலை தரட்டும். இவ்வாறு அவர் கூறினார்.