உக்ரைனில் ரஷ்யா தொடுத்துவரும் போர் ஓராண்டை நிறைவுசெய்யவிருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று உக்ரைனுக்கு திடீர் விசிட் அடித்தது பெரும் பேசுபொருளானது.

முதலில் போலந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அங்குசென்ற பைடன், போலாந்திலிருந்து ரயில் மூலம் நேற்று உக்ரைனை வந்தடைந்தார். அதோடு அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்த பைடன், “புதின் தவறாக எண்ணிவிட்டார். நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் நடக்கும் அனைத்துக்கும் மேற்கத்திய நாடுகளே காரணம் எனக் கூடியிருக்கிறார்.
உக்ரைன் மீதான ராணுவ படையெடுப்பின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இன்று பேசிய புதின், “ உக்ரைன் உடனான பிரச்னையை அமைதியான வழியில் தீர்க்க, எல்லா வகையிலும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். படிப்படியாக, நாங்கள் எதிர்கொள்ளும் இலக்குகளை மிகவும் கவனமாகவும், முறையாகவும் தீர்ப்போம். உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்துவது, அதனை விரிவுபடுத்துவது என அனைத்தும் முழுமையாக மேற்கத்திய நாடுகளிடமே இருக்கிறது. அவர்களே அதற்குப் பொறுப்பு.

மேற்கத்திய நாடுகள் உள்ளூர் பிரச்னையை உலகப் பிரச்னையாக மாற்ற முயற்சிக்கிறது. அதற்கு சரியான வழியில் நாங்கள் பதிலளிப்போம். நாங்கள் எங்களுடைய நாட்டின் இருப்பைப் பற்றி பேசுகிறோம் ” என்றார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்ற பைடனின் அறிவிப்பும், சரியான வழியில் பதிலளிப்போம் என்ற புதினின் அறைகூவலும், போரை மேலும் தீவிரப்படுத்துமோ என்ற சந்தேகத்தை பலரிடையே எழுப்பியிருக்கிறது.