ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளிவந்த ‘துணிவு’ படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றி பெற்றது. துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித் வெளிநாடு சென்று ஓய்வெடுத்து வருகிறார், ஓய்வுக்கு பின்னர் தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து அஜித் இன்னும் சில வாரங்களில் அவரது அடுத்த படமான ‘ஏகே 62‘ படத்தின் பணிகளில் பிசியாக இருக்க போகிறார். இடைவெளி இல்லாமல் இந்த படத்தில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கால்ஷீட் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் சிறப்பாக பைக் ஓட்டுவார் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று, சமீபத்தில் கூட அவர் பைக்கில் ஹிமாலயன் ட்ரிப் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ‘ஏகே 62’ படத்தின் பணிகளை முடித்த கையோடு அஜித் பைக்கில் ஒரு நீண்ட ட்ரிப் போக திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
‘ஏகே 62’ படத்தை இயக்கப்போவது விக்னேஷ் சிவன் தான் என்று முன்னர் அறிவிப்புகள் வெளியானது. ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை, அதனால் விக்னேஷ் சிவன் இந்த திட்டத்திலிருந்து விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியானது. அதற்கேற்ப விக்னேஷ் சிவனும் தனது ட்விட்டர் பக்கத்தின் கவர் போட்டோவில் இருந்த அஜித்தின் புகைப்படத்தை நீக்கியும், பாயோவில் வைக்கப்பட்டிருந்த ‘ஏகே 62’ எனும் தலைப்பையும் நீக்கினார். தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘ஏகே 62’ படத்தை கழக தலைவன் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார், இவர் தற்போது படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளை தொடங்கிவிட்டதாகவும், படத்தில் நடிக்கப்போகும் மற்ற நடிகர்களை தேர்வு செய்யும் பணியிலும் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
‘ஏகே 62’ படத்தில் இயக்குனர் மட்டுமல்ல இசையமைப்பாளரும் மாறியிருக்கிறார், அதாவது அனிரூத்துக்கு பதிலாக தற்போது படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அருண் விஜய், மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய இரண்டு வெற்றி படங்களில் நடித்திருந்ததால் ‘ஏகே 62’ படத்திலும் அருண் விஜய் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர அருண் விஜய் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ‘ஏகே 62’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கும்.