காந்திநகர்: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு தீபாவளியன்று மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இந்த பாலத்தில் கூடினர். இதனால் பாலம் அறுந்து விழுந்ததில், 141 பேர் உயிரிழந்தனர்.
அதன்பின் பாலத்தை பராமரிக்கும் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது. ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் பெனிவால் தலைமையிலான இந்தக் குழு தனது முதற்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது.
அதில் கூறியிருப்பதாவது: மோர்பி தொங்கு பாலத்தில் 2 பிரதான இரும்பு கேபிள்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் பல துணை கேபிள்கள் இருந்தன. இதில் ஒரு பிரதான கேபிள் விபத்து நடைபெறுவதற்கு முன்பே துருப்பிடித்திருந்ததும் அதில் இருந்த பாதி துணை கேபிள்கள் உடைந்திருந்ததும் தெரிய வந்துள்ளது. துருப்பிடித்த மெயின் கேபிள் அறுந்து விழுந்ததும் விபத்து நடந்துள்ளது.
மேலும் சஸ்பெண்டர்ஸ் கம்பியில் புதிய கம்பியை பற்ற (வெல்டிங்) வைத்துள்ளனர். இதுவும் விபத்துக்கு மற்றொரு காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.