புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யு) பல்கலைக்கழக மாணவர் பேரவைக்காக ‘டெப்ளாஸ்’ என்ற பெயரில் ஓர் அலுவலகம் அதன் வளாகத்தில் உள்ளது. இதில், மாணவர்கள் தங்களுக்காக அவ்வப்போது திரைப்படங்கள், முக்கிய ஆவணப்படங்களை திரையிடுவது உண்டு.
‘ஜானே பி தோ யாரோ’ எனும் இந்தி படத்தை ‘110 பிளவர்ஸ்’ எனும் மாணவர் அமைப்பினர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திரையிட்டனர். இதற்காக அங்கு சுவரில் இருந்த மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட சுமார் 30 தலைவர்களின் படங்களை அவர்கள் கழற்றி கீழே வைத்தனர். அந்த இடத்தில் திரையை மாட்டி அதில் படம் ஓடத் தொடங்கியது. அப்போது ஜேஎன்யுவின் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் சுமார் 15 பேர் அங்கு வந்தனர். அன்றைய தினம் வீரசிவாஜியின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு மாலை அணிவிக்கப்பட்ட படமும் கீழே வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய அவர்கள் அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கினர். இந்த திடீர் தாக்குதலில் தூத்துக்குடி ஆய்வு மாணவர் எஸ்.நாசருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழியத் தொடங்கியது. மற்றொரு தமிழக மாணவரும் காயமடைந்தார். கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் சிலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.