துருக்கியில் இரண்டு நிலநடுக்கங்கள் இடம்பெற்றுள்ளன
குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பாளர்கள் மீண்டும் தேடி வருகின்றனர்.
ஆறு தசம் நான்கு ரிக்டர் அளவிலான இந்தப் பூமியதிர்ச்சியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே இம்மாதம் 6 அம் திகதி இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், துருக்கியின் தென் பகுதியிலுள்ள ஹட்டேய் மாகாணத்தில் இரண்டு கிலோமீற்றர் ஆழத்தில் நேற்றைய (20) பூமியதிர்ச்சி பதிவாகி உள்ளது.
இதில் 200இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஐந்து தசம் எட்டு ரிக்டர் அளவில் இரண்டாவது பூமியதிர்ச்சி பதிவாகியதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது.
இந்த அதிர்வுகள் சிரியா, ஜோர்தான், இஸ்ரேல், எகிப்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய பூமியதிர்ச்சியிலும் பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்திருப்பதாகவும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் ஹட்டேய் மாகாண மேயர் குறிப்பிட்டுள்ளார்.