வரும் 25-ந் தேதி, மாலை 5 மணிக்கு மேல் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று, தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
வரும் 27-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம்தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரம் வருகிற 25-ந் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்துவது, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 100% வாக்கு பதிவிற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 பணிமனைகள் அகற்றப்பட்டு, 14 பணிமனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக, கட்டுப்பாட்டு அறைக்கு 455 புகார்கள் வந்துள்ளன. இதில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வரும் 25-ந் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. வரும் 25-ந் தேதி மாலை 5 மணிக்கு பிறகு ஈரோட்டில் தங்கியிருக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
அத்தனையும் மீறி யாரேனும் தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.