புதுடில்லி: புதுடில்லியில் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கும் இந்த புதிய கொள்கை குறிப்பிட்ட சில வியாபாரிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்து உள்ளதாகவும், சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த முறைகேட்டில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்ட அரசியல்வாதிகள், விஜய் நம்பியார், அபிஷேக் உள்ளிட்ட தொழில் அதிபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, மதுபானக் கொள்கை வாபஸ் பெறப்பட்டது. புதுடில்லி துணை முதல்வரான மணீஷ் சிசோடியா, கலால் துறை அமைச்சராகவும் பதவி வகித்ததால், அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.
அவரது வீடு, அலுவலகம், வங்கி லாக்கர் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில், புதுடில்லி சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த நவம்பரில் ஏழு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், மணீஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை.
அடுத்த கட்ட விசாரணைக்காக நேற்று முன்தினம் ஆஜராகும்படி மணீஷ் சிசோடியாவுக்கு, சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாத நிலையில், வரும் 26ம் தேதி, ஆஜராக, புதிய சம்மன் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:
புதுடில்லி மாநிலத்தில் பட்ஜெட் தயாரிக்கும் பணி உள்ளதால், இந்த மாத இறுதியில் ஆஜராக வாய்ப்பு அளிக்குமாறு மணீஷ் சிசோடியா தரப்பில் கோரப்பட்டது. 26ம் தேதி ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நடத்திய முக்கிய சந்திப்புகள், தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்த சிசோடியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளோம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement