சென்னை: “தமிழக காவல் துறை, முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை பாஜக தலைவர் அண்ணாமலை நிறைவு செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிப்ரவரி 8-ம் தேதி இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளது. பாஜக இதை கையில் எடுத்த பிறகுதான் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை, டிஜிபியும் பேசவில்லை என்று ராணுவத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். காவல் துறை மெத்தனமாக இருந்துள்ளது. முதல் 6 நாட்கள் காவல் துறை கடமையை சரியாக செய்யவில்லை. இதற்கு காரணம் ஆளும் கட்சியின் அழுத்தம்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்ந்து சீர்கெட்டுக் கொண்டுள்ளது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒரே நாளில் 9 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளது. இதை ஆளுநர் தொடர்ந்து கவனித்து கொண்டுள்ளார். காவல் துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை. முதல்வரின் மருமகன் மற்றும் மகன் ஆகியோர் தங்களுக்கு விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்குகின்றனர். திறமைக்கும், நேர்மைக்கும் வேலை இல்லை.
தமிழகத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் பணியை சரியாக செய்யவில்லை. ஈரோட்டில் குக்கர், புடவை என்று எல்லாம் விநியோகம் செய்கிறார்கள். 8 நாட்கள் பொறுத்திருத்து பார்ப்போம். மத்திய தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்று” என்று அவர் கூறினார்.