சென்னையைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டுவந்த ஹிஜாவு நிதி நிறுவனம், பொதுமக்களிடம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 15 ஆயிரம் ரூபாய் வரை வட்டி கிடைக்கும் என்று விளம்பரம் செய்தது. இதை நம்பிய பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஒருகட்டத்தில் இந்த நிறுவனம் ஏமாற்றுவது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்தப் புகாரை அடுத்து, ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர்கள் சௌந்தரராஜன், அலெக்சாண்டர் உட்பட 21 பேர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடைபெற்றது. மேலும், மோசடியில் தொடர்புடைய வீடு, அலுவலகம் உட்பட 32 இடங்களில் சோதனையும் நடைபெற்றது. இதில், இந்த நிறுவனத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்திருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய முக்கிய நபர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும், இந்தப் பண மோசடியில் தொடர்புடைய, தலைமறைவாக இருந்த இரண்டு பெண்களை போலீஸார் சமீபத்தில் கைதுசெய்தனர். முக்கியக் குற்றவாளிகளான சௌந்தரராஜன், அலெக்சாண்டரைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநரான சௌந்தரராஜன் நேற்று சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சௌந்தரராஜனை நீதிமன்றக் காவலில் வைக்கச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட பெரம்பூர் பெரியார் நகரைச் சேர்ந்த முகவர் நேரு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இன்று அவர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். சம்பவமறிந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.