1 லட்சம் வீடுகள், 9 ஆயிரம் ஓட்டல் அறைகளுடன் சவுதி அரேபியாவில் மேலும் ஒரு மெகா திட்டம் –  19 சதுர கி.மீ. பரப்பளவில், 400 மீட்டர் உயரத்தில் அமைகிறது

ரியாத்: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தின் நடுப் பகுதியில் ‘தி முகாப்’ என்ற பெயரில் ஒரு மெகா கட்டிடம் உருவாக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக ஒரு வீடியோவை அரசு வெளி யிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த கட்டிடம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் போல 20 மடங்கு பெரிதாக இருக்கும். 19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 400 மீட்டர் உயரத்தில் இந்த கட்டிடம் அமையும். இதில் அருங் காட்சியகம், தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், பல்நோக்கு திரையரங்கம் மற்றும் 80-க்கும் மேற்பட்ட கலாச்சார மையங்கள் அமைய உள்ளன.

இதுதவிர 1.04 லட்சம் குடியிருப்புகள், 9,000 ஓட்டல் அறைகள், 9.8 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் சில்லறை வணிக கடைகள், 14 லட்சம் சதுர மீட்டர் அலுவலக இடங்கள், 6.2 லட்சம் சதுர மீட்டர் ஓய்வு மையங்கள், 18 லட்சம் சதுர மீட்டர் சமுதாய மையங்களும் இதில் அமைய உள்ளன. இதன் கட்டுமானப் பணி 2030-ல் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 3.34 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

சவுதி அரேபிய அரசு 100 மைல் நீள ஸ்கை ஸ்கிராப்பர் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது. இதன் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு மெகா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.