12 கோரிக்கைகள் – ‘தமிழைத் தேடி’ பயணத்தை தொடங்கினார் ராமதாஸ்

சென்னை: 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையிலிருந்து மதுரைக்கு ‘தமிழைத் தேடி’ பயணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும், பள்ளிகளில் தமிழ்தான் கட்டாயப் பயிற்று மொழி உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையிலிருந்து மதுரைக்கு ‘தமிழைத் தேடி’ பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

இதன்படி இன்று (பிப்.21) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ‘தமிழைத் தேடி’ பரப்புரை பயணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கினார். இதில் பொங்குதமிழ் அறக்கட்டளை தலைவரும் பாமக கவுரவ தலைவருமான ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தமிழ் அறிஞர்கள் அரு.கோயிலன், தமிழண்ணல் கோ.பெரியண்ணன், புலவர் சுந்தரராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடக்க நிகழ்ச்சியில் ராமதாஸ் எழுதிய ‘எங்கே தமிழ்’ என்ற நூலை சீர்காழி சிவ சிதம்பரம் வெளியிட்டார். முதல் பிரதியை புஷ்பவனம் குப்புசாமி பெற்றுக்கொண்டார்.

இந்த பரப்புரை பயணம் மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி, திண்டுக்கல் வழியாக பயணித்து மதுரையில் வரும் பிப்ரவரி 28-ம் தேதி நிறைவு பெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.