ஊட்டி மலர் கண்காட்சியில் துலிப் மலர் அலங்காரம்-1800 தொட்டிகளில் வைக்க பூங்கா நிர்வாகம் தீவிரம்

ஊட்டி : இம்முறை  மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சியின் போது, 1800 தொட்டிகளில் துலிப்  மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சுற்றுலா  நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச்  செல்கின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்  அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இது போன்று கோடை சீசனின் போது ஊட்டி  வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தாவரவியல் பூங்காவில் மலர்  கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சி ஐந்து நாட்கள் நடக்கும்.  மலர் கண்காட்சியின் போது, பூங்காவில் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு  செய்யப்பட்டு, அவைகள் பூத்துக் குலுங்கும்.

மேலும், 35 ஆயிரம்  தொட்டிகளை கொண்டு பல்வேறு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த  தொட்டிகளில் லில்லியம், ஜெர்பரா உட்பட பல வெளி நாடுகளில் காணப்படும்  மலர்களும் நடவு செய்யப்பட்டு அந்த மலர்கள் பூத்துக் காணப்படும். சில  சமயங்களில் வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்களை கொண்டு  மாடங்களில் பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக, வெளி  நாடுகளில் மலர்கள் கொண்டு வரப்படும். ஹாலாந்து நாட்டில் காணப்படும் துலிப்  மலர்கள் கொண்டு வரப்பட்டு காட்சி மாடத்தில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

 இந்நிலையில், முதல்  முறையாக துலிப் மலர் நாற்றுக்கள் கொண்டு வரப்பட்டு சோதனை முயற்சியாக  தாவரவியல் பூங்கா நர்சரியில் வைக்கப்பட்டது. முதற்கட்டமாக 50 மலர்  நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இதனை மிகவும் பாதுகாப்புடன் பூங்கா நர்சரி  ஊழியர்கள் பராமரித்து வந்தனர். இந்த செடிகள் வளர்ந்து, தற்போது அதில் பல  வண்ணங்களில் மலர்கள் பூத்துள்ளன.  இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு  ரசித்து செல்லும் வகையில் தற்போது கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து  வைக்கப்பட்டுள்ளன.

பல வண்ணங்களை கொண்ட இந்த தூலிப் மலர்களை சுற்றுலா  பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதன் அருகே நின்று  புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். சோதனை முயற்சியாக ஊட்டி தாவரவியல்  பூங்காவில் வளர்க்கப்பட்ட துலிப் மலர் செடிகளில் மலர்கள் பூத்த நிலையில்,  கோடை சீசனின் போது, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லும் வகையில் 1800  தொட்டிகளில் துலிப் மலர்களை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக  டெல்லியில் இருந்து துலிப் மலர் நாற்றுக்கள் (பல்ப்) வாங்கப்பட்டுள்ளது.  இவைகள் பூங்கா நர்சரியில் நடவு செய்யப்பட்டு, மலர் கண்காட்சியின் போது, தூ  லிப் மலர்களை கொண்டு அலங்காரம் மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.