தமிழிசை பதிலடி; டுடோரியல் ஒன்னும் கேவலம் இல்ல… இறுமாப்பு வேண்டாம் சு.வெ!

தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்து வருபவர் தமிழிசை சவுந்தரராஜன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ்நாட்டு மக்கள் எங்களின் தலைமை பண்புகளை அங்கீகரிக்கவில்லை. நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சென்றிருந்தால் மத்திய அமைச்சர்களாக மாறியிருப்போம். ஆனால் நாங்கள் எம்.பிக்களாக தேர்வு செய்யப்படவில்லை. இந்த சூழலில் எங்களின் திறமைகள் வீணடிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் ஆளுநர்களாக நியமிக்கின்றனர்.

தமிழிசை கொடுத்த பதிலடி

இதில் எங்களின் தவறு எதுவும் இல்லை. மக்கள் தான் எங்களின் தலைமை பண்புகளை அங்கீகரித்திருக்க வேண்டும். அவர்கள் தான் நல்ல வேட்பாளர்களுக்கும், திறமையானவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதனை சுட்டிக் காட்டி மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.

டுடோரியல் கேவலமான இடமல்ல

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார். டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல. அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான். டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள். தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல. தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது. ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம்.

ஆளுநர் ஆக சிறப்பு தகுதிகள்

அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே. நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம். நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம். இறுமாப்பு வேண்டாம். ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும். அதைப் போன்ற தகுதிகளை தாங்கள் பெறப் போவதில்லை. மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக பதவி வகித்தவர்.

மக்களவை தேர்தலில் தோல்வி

தாமரை மலர்ந்தே தீரும் என்ற கோஷத்தை மிகவும் தீவிரமாக முன்னெடுத்தவர். மிகவும் கடுமையாக பேசும் பாஜக தலைவர்களுக்கு மத்தியில் மிகவும் நாகரிகமாக பேசி அரசியல் செய்து வந்தவர். கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் திமுகவின் கனிமொழியிடம் தோல்வியை தழுவினார்.

மீண்டும் அரசியல் பாதை

இருப்பினும் 2,15,934 வாக்குகள் பெற்றிருந்தார். அதே ஆண்டு செப்டம்பரில் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2021 பிப்ரவரியில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆளுநரான பின்னரும் அரசியல் பேசுவதை விடவில்லை. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான விஷயங்கள் அரங்கேறிய போது ஆதரவாக குரல் கொடுத்தார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலிக்கும், தமிழிசைக்கும் இடையில் காரசார மோதல்கள் வெடித்தன. பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் பெருமைகள் குறித்து பேசுவதை தொடர்ந்து கையாண்டு வருகிறார். இது மீண்டும் அரசியல் அவதாரம் எடுக்கும் நோக்கமா என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.