ஓபிஎஸ் எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து? அதிமுக பொ.செ ஆனதும் எடப்பாடியின் டார்கெட்!

அதிமுகவில் அதிகாரம் படைத்த ஒற்றை தலைமையாக இனி
எடப்பாடி பழனிசாமி
செயல்படுவார். இதனை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி ஜூலை 11, 2022ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் என்றாகிறது.

ஓ.பன்னீர்செல்வம் எதிர்காலம்

இவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன், எம்.பி ரவீந்திரநாத் மற்றும் நிர்வாகிகள் நீக்கப்பட்டதும் செல்லுபடியாகிறது. இதனால் இவர்களது அரசியல் எதிர்காலம் என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது. யார் வந்தாலும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மூவரை மட்டும் ஏற்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எடப்பாடி ஆலோசனை

தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. இது முடிவுக்கு வந்த பின்னர் பொதுச் செயலாளர் பதவிக்கு காய்களை நகர்த்துவர். இன்றைய செய்தியாளர்கள் பேட்டியில், மூத்த தலைவர்கள் உடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாஅடி பழனிசாமி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவிகள் மீது கை வைக்க வாய்ப்புண்டு.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்

ஏனெனில் இவர்கள் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்றனர். தற்போது அந்த கட்சியிலேயே இல்லை என்பதால் அந்தப் பதவி மட்டும் எதற்கு என்ற சிந்திக்க வாய்ப்புண்டு. எனவே கொறடா மூலம் சபாநாயகருக்கு மனு அளிக்கலாம். அந்த நான்கு பேரையும் தகுதி நீக்கம் செய்ய அறிவுறுத்தலாம். ஆனால் திமுகவை சேர்ந்த சபாநாயகர் அப்பாவு அதிமுக விவகாரத்தை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்.

உதயகுமாருக்கு ரூட் கிளியர்

ஏற்கனவே எதிர்க்கட்சி துணைத் தலைவர் நாற்காலியை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி நடையாய் நடந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை பார்க்க முடிந்தது. அதேசமயம் கட்சியில் இருந்து நீக்கிவிட்டதால் தகுதி நீக்கம் செய்யவும் கோர முடியாது. வேறு கட்சியில் இணைந்தால் தான் அதற்கு வாய்ப்புண்டு.

தேர்தல் ஆணையத்தில் முறையீடு

எனவே அடுத்தகட்டமாக தேர்தல் ஆணையத்தை அணுகலாம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரக்கூடும். இருப்பினும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவிகளுக்கு ஆபத்து இல்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். எடப்பாடி போட்ட கணக்கின் படி எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை கொண்டு வந்துவிடுவார்.

டெல்லி கைகொடுக்குமா?

அப்படி நடந்தால் ஓபிஎஸ் மற்றும் அவரது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் தனி இருக்கை கேட்டு அமர வேண்டும். இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். எனவே அதுவரை தனது இருப்பை ஓ.பன்னீர்செல்வம் உறுதி செய்வார். அதன்பிறகு அவரது அரசியல் நிலைப்பாடு என்ன? எதிர்காலம் என்ன? ஏதேனும் ஆதாயம் பெறும் வகையில் டெல்லி வழிகாட்டுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.