புதுடில்லி :ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் அணிவகுப்பு மற்றும் கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை, உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
நாட்டின் ௭௫வது சுதந்திர தினம், அம்பேத்கர் பிறந்த நாள், விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு, தமிழகத்தில் கடந்தாண்டு அக்., ௨ல் அணிவகுப்பு மற்றும் கூட்டங்கள் நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ்., சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ‘உள் அரங்கில் அணிவகுப்பு மற்றும் கூட்டம் நடத்த அனுமதிக்கலாம்’ என, கடந்தாண்டு நவ., ௪ல் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கடந்த மாதம் ௧௦ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ‘மூன்று தேதிகளை குறிப்பிட்டு அணிவகுப்பு மற்றும் கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு விண்ணப்பிக்கலாம்.
‘அதில் ஒரு தேதியில் அணிவகுப்பு மற்றும் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்’ என, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அணிவகுப்பு மற்றும் கூட்டத்துக்கு அனுமதி அளித்தால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ௫ம் தேதி அணிவகுப்பு மற்றும் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், இதை அவசரமாக விசாரிக்க தமிழக அரசு தரப்பில் நேற்று கோரப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement