புதுடில்லி :கடந்த 35 ஆண்டு களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இலங்கையைச் சேர்ந்த குற்றவாளியை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் குற்றம் புரிந்து ஆயுள் தண்டனை பெற்ற இலங்கையைச் சேர்ந்த குற்றவாளி கடந்த 35 ஆண்டுகளாக தமிழக சிறையில் உள்ளார். இவரை முன்கூட்டியே விடுதலை செய்ய, தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை, தமிழக அரசு கடந்த ஆண்டு நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட ராஜன் என்பவர் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை, நீதீபதிகள் ஏ.எஸ்.ஓகா, ராஜேஷ் பிண்டல் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 35 ஆண்டுகள் அவர் தண்டனை அனுபவித்து உள்ளார்.
அவரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை தமிழக அரசு நிராகரித்து உள்ளது.
குற்றவாளி நிகழ்த்திய குற்றத்தின் தீவிரத்தன்மை மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்படுவதால், இவரை முன்கூட்டியே விடுதலை செய்வது, நியாயமான விசாரணையை பாதிக்கும் எனக்கூறி மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி இலங்கையைச் சேர்ந்தவர், விடுதலை செய்தால் சொந்த நாட்டுக்கு உடனடியாக செல்வதாக கூறுகிறார். அவரை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோரிக்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement