ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்: யார் யாருக்கு எத்தனை வாக்குகள்?

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்தவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இதனால் அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி, பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட 5 வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

மொத்தம் 15 சுற்றுகள்இந்நிலையில் 74.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து ஈரோடு சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு அறைகளில் வாக்குகளை எண்ண திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கைநாளை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்குகிறது. பிரதான கட்சிகள் என்று பார்த்தால் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே. எஞ்சியவர்கள் சுயேட்சைகள் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
​​
2021 சட்டமன்ற தேர்தல்கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 67,300 (44.27%) வாக்குகள், தமிழ் மாநில காங்கிரஸ் 58,396 (38.41%) வாக்குகள், நாம் தமிழர் கட்சி 11,629 வாக்குகள் (7.65%), மக்கள் நீதி மய்யம் 10,005 வாக்குகள் (6.98%), நோட்டா 1,546 வாக்குகள் (1.02%), அமமுக 1,204 வாக்குகள் (0.79%) பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.
வாக்கு சதவீதம்இந்நிலையில் 2023 இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் யாருக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சில கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் யாருக்கு எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் கடந்த முறையை போலவே 44 சதவீத வாக்குகளை பெறும்.
இடைத்தேர்தல் முடிவுகள்அதிமுக வாக்கு சதவீதத்தில் சற்றே முன்னேறி 40 சதவீதம் வரை வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாம். மற்ற கட்சிகளை பொறுத்தவரை பெரிய அளவில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 70 – 75 ஆயிரம் வாக்குகள், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 60 – 65 ஆயிரம் வாக்குகளை பெறக்கூடும்.
ஈரோடு கிழக்கில் பரிசு மழைநாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 14 – 15 ஆயிரம் வாக்குகள், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 9 – 10 ஆயிரம் வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான கட்சிகள் பரிசு மழையை வாரி வழங்கியதாக ஏராளமான புகார்கள் குவிந்தன. நேரில் கள ஆய்வு செய்த அரசியல் பார்வையாளர்கள், யூ-டியூப் சேனல்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டனர்.​
திருமங்கலம் ஃபார்முலாஇடைத்தேர்தல் என்றாலே திருமங்கலம் ஃபார்முலாவை தான் பலரும் முன்னுதாரணமாக கூறுவர். எப்படியெல்லாம் பணப்பட்டுவாடா நடந்தது என வசைமாரி பொழிவர். அதை முறியடிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு ஃபார்முலா என ஒன்று உதயமாகி விட்டதாக கூறத் தொடங்கிவிட்டனர். இத்தகைய சூழலில் திமுக செய்த களப்பணி பெரிய அளவில் கைகொடுக்கவில்லையோ என்ற எண்ணத் தோன்றுகிறது. அதிகாரப்பூர்வ முடிவுகளை தெரிந்து கொள்ள மார்ச் 2 பிற்பகல் வரை காத்திருப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.