ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு (ஐஆர்டிடி) எடுத்துச் செல்லப்பட்டன. அங்குள்ள அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் என 450- க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 8 மணிக்கு தொடக்கம்: இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை இன்று (மார்ச் 2)காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். தரைதளத்தில் 10 மேசைகளும், முதல் தளத்தில் 6 மேசைகளும் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு மேசைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர் வாக்கு எண்ணிக்கை பணியை மேற்கொள்வர். ஒவ்வொரு மேசையிலும், வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பர்.

தபால் வாக்குகள்: இந்நிலையில், 80 வயதைக் கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், போலீஸார் செலுத்திய தபால் வாக்குப் பெட்டிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் நேற்று மாலை வரைதபால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று காலை, தபால் வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படும். இன்று மதியத்துக்குப் பிறகு முன்னணி நிலவரம் தெரியவரும். மாலை, முழுமையான முடிவுகள் தெரியவரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.