கேம்பிரிட்ஜில் உரையாற்றுவதற்காக ராகுல்காந்தி இங்கிலாந்து பயணம்

புதுடெல்லி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் முன் உரையாற்றுவதற்காக ராகுல்காந்தி டெல்லியில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் முன்னாள் மாணவரான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒரு வார பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றுள்ளார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன் உரையாற்றும் ராகுல்காந்தி, ‘21ம் நூற்றாண்டில் பாடங்களைக் கற்றுக்கொள்வது’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார். தொடர்ந்து இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசுகிறார்.

அதேபோல், ‘பிக் டேட்டா மற்றும் ஜனநாயகம்’ மற்றும் ‘இந்தியா-சீனா உறவுகள்’ குறித்தும் பேசுவார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் கேம்பிரிட்ஜ் ஜேபிஎஸ் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தியை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கேம்பிரிட்ஜில் அவர், ‘21ம் நூற்றாண்டில் பாடங்களைக் கற்றுக்கொள்வது’ என்ற தலைப்பில் உரையாற்றுவார்’ என்று தெரிவித்துள்ளது.

‘ட்ரிம்’ செய்யப்பட்ட தாடி
கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கிய நடைபயணம், 12 மாநிலங்கள் வழியாக ஜம்மு – காஷ்மீரில் நிறைவடைந்தது. கிட்டதட்ட நான்கரை மாதங்களில் சுமார் 4,000 கி.மீ. தூரம் ராகுல்காந்தி பயணித்தார். ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்த அவர், வழக்கத்துக்கு மாறாக தாடியை வளர்த்துக் கொண்டார். இவரது தாடி வளர்ப்பு கூட முக்கிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள ராகுல்காந்தி, தனது தாடியை ‘ட்ரிம்’ செய்துள்ளார். 5 மாதங்களுக்குப் பிறகு அவரது தாடியை ட்ரிம் செய்த புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.