நாடு முழுவதும் வீட்டு பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.50-ம் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள எரிவாயு உருளை விலை ரூ.350.50-ம் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தி உள்ளது.
ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இடைவிடாமல் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில் ஒன்றிய பாஜக அரசு போதாக்குறைக்கு சமையல் எரிவாயு உருளையின் விலையைகளை உயர்த்தி உள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
அதிகரித்து வரும் வேலையின்மை, வறுமை மற்றும் பணவீக்கத்தால் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்வதறியாது திகைத்து வரும் சூழலில் இந்த விலை உயர்வு பாமர மக்களின் தலையில் மேலும் பேரிடியாக விழுந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வாங்க வாய்ப்பு இருந்தும் சராசரியாக 7 சிலிண்டர்கள் மட்டுமே மக்கள் வாங்குகிறார்கள். இதன்பிறகு அந்த எண்ணிக்கையும் குறையும்.
சமையல் எரிவாயுக்கான மானிய தொகையையும் முழுமையாக ஒன்றிய அரசு வழங்குவதில்லை. மூன்று மாநிலங்களில் தேர்தல் முடிந்த பிறகு இந்த விலை உயர்வுகளை பாஜக அரசு அறிவித்து நாட்டு மக்களை வஞ்சித்துள்ளது. எனவே ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் எரிவாயு உருளைக்கான மானிய தொகையை முழுமையாக வழங்கிட வேண்டும் எனவும் சிபிஐ(எம்) மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது” என தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.