புதுடில்லி,மஹாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த ஆட்சி மாற்றம் தொடர்பான வழக்குகளின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தீவிரமடைந்தது. தகுதி நீக்கம் செய்வதற்கு சபாநாயகருக்கு தடை விதித்தது, பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பான விவாதம் காரசாரமாக அமைந்தது.
மஹாராஷ்டிராவில் கடந்தாண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் அடங்கிய ‘மஹா விகாஸ் அகாடி’ கூட்டணி அரசு கவிழ்ந்தது.
யாருக்கு சொந்தம்
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்திக் குழுவினர், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர்.
சிவசேனா யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக விசாரித்த தேர்தல் கமிஷன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவே உண்மையான சிவசேனா என்று அறிவித்து, கட்சியின் தேர்தல் சின்னமான, வில் அம்பை அவருக்கு ஒதுக்கி உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட காலகட்டத்தில், ஷிண்டே உட்பட, ௩௯ எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு ஜூன் ௨௭ல் உத்தரவிட்டது.
மேலும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, ஜூன் ௨௯ல் உத்தரவிட்டது.
நடவடிக்கை
சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் இந்த இரண்டு உத்தரவுகளும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு சாதகமாக, ஆதரவாக அமைந்துள்ளதாக, உத்தவ் தாக்கரே தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடங்கிய ஐந்து நீதிபதிகள் உடைய அரசியல் சாசன அமர்வு, ‘உத்தவ் தாக்கரே தரப்பில் கூறியுள்ளதுபோல், ௩௯ எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தால், ஏக்நாத் ஷிண்டே தற்போது முதல்வராக பதவியேற்றிருக்க முடியுமா?’ என, கேள்வி எழுப்பியது.
இதற்கு, ஷிண்டே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷண் கவுல் வாதிட்டதாவது:
ஷிண்டே உட்பட, ௩௯ எம்.எல்.ஏ.,க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் எடுத்திருக்க முடியாது.
ஏனென்றால் அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி நாங்கள் ஏற்கனவே மனு கொடுத்திருந்தோம்.
அப்படி ஒருவேளை எங்களை தகுதி நீக்கம் செய்திருந்தால், பெரும்பான்மை இல்லாமல் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு தானாகவே கவிழ்ந்திருக்கும்.
சபையில் போதிய உறுப்பினர் ஆதரவு இல்லை என்பதால் தான், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பாகவே முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார்.
சட்டசபையின் மொத்த பலம், ௨௮௮. கடந்தாண்டு, ஜூலை ௪ல், ஷிண்டே அரசு பெரும்பான்மையை நிரூபித்தபோது, அவருக்கு ஆதரவாக, ௧௬௪ பேர் ஓட்டளித்தனர்.
அதே நேரத்தில் மஹா விகாஸ் அகாடி கூட்டணிக்கு, ௯௯ பேர் ஆதரவு மட்டுமே இருந்தது. அவர்களுடைய கூட்டணியில் இருந்த, ௧௩ பேர் ஓட்டளிக்காமல் புறக்கணித்தனர்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்