சீர்காழி,: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர்மன்ற கூட்டம் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் வாசுதேவன், நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானங்களை இளநிலை உதவியாளர் பாபு வாசித்தார். அப்போது கவுன்சிலர்கள் முழுமதி இமயவர்மன், ராஜசேகர், பாலமுருகன், ராஜேஷ், ரமணி, ஜெயந்தி, நித்யாதேவி, ரேணுகாதேவி, சூரியபிரபா, தனவள்ளி, ரம்யா, கலைச்செல்வி ஆகிய 12 கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி முன் அமர்ந்து தீர்மானங்களை படிக்கக்கூடாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி கூட்டத்தை முடித்து விட்டு நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் சுப்பராயன் மற்றும் கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தேவதாஸ், பாஸ்கரன், வேல்முருகன், ராமு, முபாரக் அலி, நாகரத்தினம், ரஹமத்நிஷா, கஸ்தூரிபாய், சாமிநாதன் ஆகிய 12 கவுன்சிலர்கள் வெளியேறினர். இதனால் மற்ற 12 கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர்மன்ற கூடத்திலேயே உணவு சாப்பிட்டு விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திமுகவை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் மற்றும் தேமுதிக, மதிமுக , சுயேட்சை கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.