புதுடில்லி ‘கடந்த 2021 — -22ம் நிதியாண்டில், எட்டு தேசியக் கட்சிகள் பெற்ற மொத்த வருமானத்தில், பாதிக்கு மேற்பட்ட தொகையை பா.ஜ., பெற்றுள்ளது’ என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
புதுடில்லியை தலைமையகமாக வைத்து செயல்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், கடந்த நிதியாண்டில் நாடு முழுதும் இருந்து தேசியக் கட்சிகள் பெற்ற வருமானம் தொடர்பான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
இதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
பா.ஜ., – காங்., தேசியவாத காங்., பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணமுல் காங்., தேசிய மக்கள் கட்சி ஆகியவை, 2021 – 22ம் நிதியாண்டில் 3,289 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளன.
இதில், பாதிக்கும் மேற்பட்ட தொகையை பா.ஜ., பெற்றுள்ளது. பா.ஜ., பெற்ற 1,917 கோடி ரூபாயில், 854 கோடி ரூபாயை அக்கட்சி செலவு செய்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள திரிணமுல் காங்., 546 கோடி ரூபாயை வருமானமாக பெற்று, இதில் 268 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது.
கடந்த நிதியாண்டில் 541 கோடி ரூபாயை வருமானமாக பெற்ற காங்., அதில் 74 சதவீதமான 400 கோடியை செலவு செய்து உள்ளது.
கடந்த நிதியாண்டில், காங்., – பா.ஜ., தேசியவாத காங்., திரிணமுல் காங்., ஆகிய நான்கு கட்சிகளும், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 1,812 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளன.
இதில், பா.ஜ., 1,033 கோடி ரூபாயும், திரிணமுல் காங்., 528 கோடி ரூபாயும், காங்., 236 கோடி ரூபாயும், தேசியவாத காங்., 14 கோடிரூபாயும் பெற்றுள்ளன.
முந்தைய நிதியாண்டான 2020 – 21ல் 752 கோடி ரூபாயாக இருந்த பா.ஜ.,வின் வருமானம், 155 சதவீதம் உயர்ந்து, கடந்த நிதியாண்டில் 1,917 கோடி ரூபாயாக உள்ளது.
இதேபோல், திரிணமுல் காங்.,கின் வருமானம் 633 சதவீதமாகவும், காங்.,கின் வருமானம் 89 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்