பருப்பு வகைகள் கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரிப்பு: துவரை மூட்டைக்கு ரூ.1000 உயர்ந்தது

சேலம்: தமிழகத்தில் பருப்பு வகைகளின் விளைச்சல் குறைந்ததால் துவரை மூட்டைக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பயறு வகைகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், வட மாநிலங்களில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் லீ பஜார் பயறு வகைகள் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து, கொள்ளு, பச்சைப்பயறு, தட்டைபயறு, மொச்சை அவரையும், கொளத்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் வத்தலும் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டாக தமிழகத்தில் பயறு மற்றும் தானிய வகைகளின் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

அதேநேரத்தில் வடமாநிலங்களில் கடந்தாண்டு துவரை, உளுந்து, மொச்சை, பட்டாணி, பீன்ஸ், கொண்டைக்கடலை, மிளகாய், கொத்தமல்லி உள்பட பல பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்தனர். அமோக விளைச்சலையும் தந்துள்ளது. தமிழகத்தில் 25 சதவீதம் விளைச்சல் மட்டுமே நடந்துள்ளது. அதனால் நடப்பாண்டு பயறு மற்றும் தானிய வகைகளுக்கு நாம் 75 சதவீதம் வடமாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து செலவு, டோல்கேட் கட்டணம், லாரி வாடகை உயர்வு, ஏற்றம், இறக்கம் கூலி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் பயறு மற்றும் தானிய வகைகளின் விலை இந்தாண்டு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு ஏப்ரலில் உடைக்காத முழு துவரை 100 கிலோ மூட்டை ரூ.5000 முதல் ரூ.6000க்கு விற்றது. நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.6000 முதல் ரூ.7000 என்றும், ரூ.4500 முதல் ரூ.5000 விற்ற கொள்ளு ரூ.5500 முதல் ரூ.6000 என்றும், ரூ.6500 முதல் ரூ.7000க்கு விற்ற மொச்சை அவரை ரூ.9500 முதல் ரூ.10000 என்றும், ரூ.6000 முதல் ரூ.7000க்கு விற்ற பாசிப்பயறு ரூ.7500 முதல் ரூ.8000 என்றும், ரூ.6500 முதல் ரூ.7000க்கு விற்ற உளுந்து ரூ.7,500 முதல் ரூ.8,000 என்றும் விற்கப்படுகிறது.

இந்த பயறு வகைகளை உடைத்து, சுத்தப்படுத்தி விற்கும்போது கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 அதிகரிக்கும். அதேபோல் சிறு தானிய வகைகளான கம்பு, ராகி, சோளம், மக்காச்சோளம், திணை, சாமை, வரகு உள்பட பல சிறு தானிய வகைகளின் விலையும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.