“முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி முன்னெடுப்புகள்…” – சென்னை நிகழ்வில் அகிலேஷ் யாதவ் புகழாரம்

சென்னை: “கரோனா காலக்கட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட சிறப்பான பணிகளாலும், குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பிற மக்களுக்கும் வழங்கப்பட்ட உதவிகளாலும் தமிழக மக்கள் கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டனர்” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார் .

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை (மார்ச் 1) நடந்தது. இந்தக் கூட்டத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிஹார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பேசியது: “தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் எண்ணற்ற பணிகளை செய்துள்ளார். அவரது தந்தையைப் போல, நாத்திகராக அறியப்படும் அவர், அதேநேரத்தில் எந்த மதநம்பிக்கைளுக்கும் எதிரானவர் இல்லை என்பதையும் மக்கள் அறிந்திருக்கின்றனர்.

14 வயது முதல் அவர் கட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபாடு கொண்ட அவர், 1996-ல் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயராகிறார். சென்னையை வளர்ச்சியை உள்ளடக்கிய சிங்கார சென்னை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகிறார். நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தில் அவர் சிறைக்கு சென்றது நாட்டின் ஜனநாயகத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. அவருடைய சமூக நீதி சார்ந்த பார்வைக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆட்சியின்கீழ், தமிழக விவசாயிகளின் நலன்கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு வருட காலத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா காலக்கட்டத்தில், அவர் மேற்கொண்ட சிறப்பான பணிகளாலும், குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பிற மக்களுக்கும் வழங்கப்பட்ட உதவிகளாலும் தமிழக மக்கள் கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டனர்.

தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக அவர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழக மக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே பயனடைந்து வருகின்றனர்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிய சூழலில், தமிழகத்தில் முதல் வேளாண் அறிக்கை அவரது ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து தலைவர்களுடனும் இணைந்து அவர் மேற்கொண்ட சமூக நீதி கூட்டமைப்புக்கான முன்னெடுப்புகள் அனைவராலும் வரவேற்கப்பட்டது. பல்வேறு தலைவர்களுடன் இணைந்து அடுத்த தலைமுறையினருக்கும் சமூக நீதியைக் கொண்டு சேர்க்கும் முயற்சி அது” என்று அகிலேஷ் யாதவ் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.