Live : “நாற்பதும் நமதே, நாடும் நமதே..!" – பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

“நாற்பதும் நமதே, நாடும் நமதே..!” – ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் எனக்கு எழுபதாவது பிறந்தநாள். நான் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, இந்த அரங்கத்தில் நான்கு பக்கமும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் உங்களையெல்லாம் சேர்த்துதான். ஸ்டாலின் என்ற பெயருக்குள் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கின்றனர். கருணாநிதிக்கு நான் மட்டுமா பிள்ளை… நீங்கள் அனைவரும் அவருக்குப் பிள்ளைகள்தான். மு.க.ஸ்டாலின் என்னும் நான் வீட்டுக்கு விளக்காக இருப்பேன். நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன். மக்களுக்காக கவலைப்படக்கூடிய தொண்டனாக இருப்பேன். எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று நினைத்தார்களோ, அதைச் சாதித்துக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாட்டு மக்கள் எனக்கிட்ட கட்டளையை ஏற்று முதலமைச்சராகச் செயல்பட்டுவரும் நான், தி.மு.க தொண்டர்கள் இட்ட கட்டளைகளைச் செய்துவருகிறேன். கடமையையும், பெருமையையும் என்னுடைய தோளில் சுமத்தியவர்கள் நீங்கள், அதை நான் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

கலைஞரைப்போல் எனக்கு எழுதத் தெரியாது, ஆனால் அவரைப்போல் உழைக்கத் தெரியும். இந்தத் தருணத்தில் நான் கடந்துவந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்க்க நினைக்கிறேன். 14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க-வை ஒருங்கிணைத்து தேர்தல் பரப்புரைகள், பொதுக்கூட்ட மேடைகள் என கழகக் கொள்கையை முழங்கினேன். 55 ஆண்டுக்காலத்தில் தமிழகத்தில் எனது கால்படாத கிராமமே இல்லை, நகரமே இல்லை எனச் சொல்லும் அளவுக்குப் பயணம் செய்திருக்கிறேன். எனக்கு எழுவது வயது ஆகிவிட்டது என்பதை என்னாலேயே நம்பமுடியவில்லை, நினைத்துப் பார்த்தால் எல்லாம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. மக்களுக்காக உழைப்பதில் கால நேரம் எதுவும் கிடையாது… மார்ச் ஒன்று என்று சொல்லும்போதுதான் எனக்கு வயது நினைவுக்கு வருகிறது. எனக்கு 70 வயது என்று சொல்லும்போது சிலர் ஆச்சர்யப்படுகிறார்கள். இளமை என்பது வயதில் அல்ல மனதில்தான் இருக்கிறது. அண்ணா உருவாக்கிய கழகத்தை, கலைஞர் கட்டிக்காத்த கழகத்தை நிரந்தர முதலமைச்சர் பொறுப்பில் வைத்திருப்பேன்.

கல்வியில், சமூகத்தில் முன்னேற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதற்காகத்தான் திராவிட முன்னேற்ற கழகம் நிரந்தரமாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்று கூறுகிறேன். தேர்தல் வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றியிருக்கிறோம். மீதம் உள்ளதை அடுத்த ஆண்டுக்குள் நிறைவேற்றி விடுவோம். சொல்லாத நிறைய திட்டங்களையும் செய்திருக்கிறோம். சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்பதுதான் என்னுடைய கூற்று. பா.ஜ.க-வை வீழ்த்த ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்துவிட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அடிக்கல் நாட்டிவிட்டு இன்றுவரை ஒரு செங்கலுக்கு மேல் வைக்காமல் தமிழ்நாட்டை அவமானப்படுத்திக்கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. சம்ஸ்கிருதத்துக்கு கோடி கோடியாய் பணத்தை நீட்டிவிட்டு… சங்கத் தமிழுக்கு நிதி ஒதுக்கவில்லை.

ஆன்லைன் ரம்மிக்குத் தடை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது… மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்று ஆன்லைன் ரம்மிக்குத் தடைசெய்ய மறுக்கிறார்களா… நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தொண்டர்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. புதுச்சேரி உட்பட தமிழகத்திலுள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அதற்கு அனைவரும் உழைக்க வேண்டும். அதுதான் எனக்குத் தருகின்ற பிறந்தநாள் பரிசு. களம் நமக்காக காத்திருக்கிறது நாற்பதும் நமதே, நாடும் நமதே. மார்ச் என்பது அகில இந்திய அரசியலுக்கு அடித்தளமாக அமையட்டும்” என்றார்.

“2024; யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சியமைக்கக் கூடாது என்பதற்கான தேர்தல் இது!” – ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “எனக்கு சீனியர்களும், ஜூனியர்களும் வாழ்த்து தெரிவிக்க வந்திருக்கிறார்கள். இது என்னுடைய பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடை மட்டுமல்ல… இந்தியாவின் உரிய அரசியல் மேடையாக இது அமைந்திருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்கான தேர்தல். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரைசேராது” என்றார்.

“வட இந்தியக் கட்சிகள் சமூகநீதியை உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!” – ஸ்டாலின் குறித்து தேஜஸ்வி யாதவ்

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநிலத் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் பேசுகையில், “இன்று சிறப்பான நாள். முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பிறந்தநாள். அதேபோல பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இன்றுதான் பிறந்தநாள். என்னுடைய தந்தை லாலு பிரசாத் யாதவும், அவருடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கச் சொன்னார்.

கடுமையான உழைப்பின் மூலம் ஆட்சியைப் பிடித்து, சமூகநீதியின் மேன்மைகளைப் பாதுகாக்கும் வகையிலான ஆட்சியை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஸ்டாலின் நடத்திவருகிறார். சமூகநீதிக்காக நீங்கள் போராடுகிறீர்கள்… வட இந்தியாவில் இருக்கும் கட்சிகள் உங்களிடம் சமூகநீதியைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

“2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்!” – மல்லிகார்ஜுன கார்கே

பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றுகையில், “மரியாதைக்குரிய முதல்வர் ஸ்டாலின் ஜி-யின் 70-வது பிறந்தநாளை இங்கு பல்வேறு தலைவர்கள் கொண்டாடுகிறார்கள். எனக்கு 81 வயது, உங்களுக்கு 70 வயதுதான் ஆகிறது. அதனால், நான் உங்களை வாழ்த்தலாம். நீங்கள் பல்லாண்டுக்காலம் வாழ வேண்டும்.

மல்லிகார்ஜுன கார்கே

தமிழ்நாடு நன்கு வளர்ச்சியடைந்து வரும் மாநிலம். நல்ல தலைவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்களை உருவாக்கிய மாநிலம் இது. தி.மு.க-காங்கிரஸ் இணைந்து பல தேர்தல்களைச் சந்தித்திருக்கின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி தொடரும்… நாங்கள் வெற்றிபெறுவோம்” என்றார்.

“இந்தியாவுக்கே தலைமை தாங்க வேண்டும் என்ற காலம் வரும்!” – ஸ்டாலின் குறித்து துரைமுருகன்

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பொதுக்கூட்ட மேடையில் பேசுகையில், “69 வயது முடிந்து 70-வது வயதில் அடியெடுத்துவைக்கிறார். அவர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் நிறைய பணிகளை ஆற்ற வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் இல்லாத ஊர் இல்லை என்ற நிலையைக் கொண்ட கட்சி தி.மு.க. 50 ஆண்டுக்காலம் தலைமை தாங்கியவர் கருணாநிதி, உலகத்திலேயே எந்தக் கட்சிக்கும் 50 ஆண்டுக்காலம் ஒரே தலைவர் இருந்ததில்லை, இது உலக சாதனை.

துரைமுருகன்

இந்த இயக்கத்தை, கலைஞர் எப்படிக் கட்டுக்கோப்போடு அற்புதமாக வழி நடத்தினாரோ… அப்படியே வழிநடத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார். அவர் இயக்கத்தின் தலைவர் மட்டுமல்லாமல், ஒரு பக்கத்தில் நாட்டின் தலைவரும்கூட. இதோடு அவருக்குப் பணி தீரவில்லை. இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன ஆட்சிக்கு வந்து… ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை நோக்குகிறது. எப்போதெல்லாம் இறையாண்மைக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாடு கைகொடுத்திருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்தை அன்று கலைஞர் காப்பாற்றினார், இன்று நீங்கள் காப்பாற்ற வேண்டும். இந்திய நாட்டின் ஜனாதிபதி யார் என்பதை கலைஞர் கோபாலபுரத்திலிருந்துதான் அறிவித்தார் அன்று. என்னுடைய அனுபவத்தை வைத்து நான் சொல்கிறேன், ஒருநாள் ஒட்டுமொத்த இந்தியாவும் கோபாலபுரம் வீட்டு வீதிக்கு வந்து, `நீங்கள்தான் இந்தியாவுக்குத் தலைமை தாங்க வேண்டும்’ என்று கூறும் காலம் வரும்” என்றார்.

“தேசிய அரசியலுக்கு நீங்கள் வர வேண்டும்!” – ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த ஃபரூக் அப்துல்லா

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஃபரூக் அப்துல்லா பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பணியாற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைவரும் ஒன்று சேர வேண்டிய தருணம் இது.

தேசிய அரசியலுக்கு நீங்கள் வர வேண்டும். மு.க.ஸ்டாலின் அவர்களே நீங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே உழைத்து வருகிறீர்கள். ஒரு சிறந்த தலைவரின் மகன் நீங்கள். உங்கள் தந்தையை நான் நன்கு அறிவேன். உங்கள் தந்தையும், என் தந்தையும், ஒரு சிறந்த இந்தியாவைக் கட்டமைக்க பாடுபட்டனர்.

ஃபரூக் அப்துல்லா

இந்தியாவில் மக்கள் பசியில் இருக்கின்றனர். வேலைவாய்ப்பில்லை. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். ஸ்டாலின் அவர்களே நீங்கள் தேசிய அரசியலுக்கு வாருங்கள். உங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை தேசிய அளவில் காட்டுங்கள். பொதுவாக யூனியன் பிரதேசங்களை மாநிலங்களாக மாற்றுவார்கள், ஆனால் காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக இவர்கள் மாற்றியிருக்கிறார்கள்” என்றார்.

“நாத்திகவாதியாக இருந்தாலும், எந்த மதத்துக்கும் எதிரானவர் இல்லை ஸ்டாலின்!” – அகிலேஷ் யாதவ்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அகிலேஷ் யாதவ், “முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளில், அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்றியிருக்கிறார். அவர் நாத்திகவாதியாக இருந்தாலும், எந்த மதத்துக்கும் எதிரானவர் இல்லை.

அவரது வழிகாட்டுதலால் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது. கொரோனா காலத்திலும் மக்களை நன்றாகப் பாதுகாத்து நோய்த்தொற்றைச் சரியாகக் கையாண்டார்” என்றார்.

`ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது?” – ஃபரூக் அப்துல்லா

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்ட நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை வந்த காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இது ஓர் அற்புதமான ஆரம்பம். ஸ்டாலினும், தி.மு.க-வும் தேசத்தின் ஒற்றுமையைக் காண்பதில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றனர். இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை. வேற்றுமையைப் பாதுகாத்தால், ஒற்றுமையைக் காப்பீர்கள். எனவே, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவை இணைக்க முயல்கின்றனர். இது மேலும் வலுப்பெறும் என்று நம்புகிறேன், மற்ற தலைவர்களும் இதே வகையில் சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்,

பின்னர் செய்தியாளர்கள், 2024 தேர்தல் குறித்தும் பிரதமர் வேட்பாளர் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஃபரூக் அப்துல்லா, “நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிபெறும்போது, இந்த தேசத்தை வழிநடத்தி ஒன்றிணைக்க சிறந்த மனிதர் யார் என்பதை முடிவுசெய்வார்கள்” என்றார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்று கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த ஃபரூக் அப்துல்லா, “ஏன் முடியாது… ஏன் அவரால் பிரதமராக முடியாது… அதில் என்ன தவறு?”

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க சார்பில் சென்னையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டின்பேரில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றவிருக்கிறார்.

பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள்
பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள்
பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள்
பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள்

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்கவிருக்கும் நிலையில், பா.ஜ.க கூட்டணிக்கு எதிரான தேசிய அளவில் வலுவான கூட்டணியை அமைக்க ஸ்டாலின் இந்த முயற்சிகளை எடுத்துவருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.