சென்னை: ஒருபுறம் நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டு, மறுபுறம் அரசு மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசு இதற்கான அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள 15 அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நாளை மறுநாள் மார்ச் 4-ஆம் நாள் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்திருக்கிறார். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது; கண்டிக்கத்தக்கது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் தான், அத்தேர்வை தமிழக அரசும், பாமக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்க்கின்றன. நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டு பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது என்ன வகையான சமூகநீதி?
நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தர உள்கட்டமைப்பு மற்றும் உண்டு – உறைவிட வசதியுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், அவை கிராமப்புற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை புறக்கணிப்பதற்கானதாக இருக்கக்கூடாது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கே நுழைவுத் தேர்வு இல்லாதபோது, பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும். இத்தேர்வும், நீட்டும் ஒரே கொள்கையிலானவை. அச்சமூக அநீதிக் கொள்கை நமக்குத் தேவையில்லை. மாதிரி பள்ளி நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.