ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தபால் வாக்குகளில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2)காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு மேசைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் வாக்குகளை எண்ணும் பணியை மேற்கொள்கின்றனர்.
வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாக, தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 398 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 106 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 16 தபால் வாக்குகளை பெற்றுள்ளார்.