ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு (ஐஆர்டிடி) எடுத்துச் செல்லப்பட்டன. அங்குள்ள அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் என 450- க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2)காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தரைதளத்தில் 10 மேசைகளும், முதல் தளத்தில் 6 மேசைகளும் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மேசைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் வாக்குகளை எண்ணும் பணியை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு மேசையிலும், வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளனர்.
முதலில் எண்ணப்படும் தபால் வாக்குகள்: இந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. இவற்றின் முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.