உமேஷ் பால் கொலை வழக்கு – உ.பி. மாபியா கும்பல் உதவியாளர் வீடு இடிப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ.வாக இருந்த ராஜூ பால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மாபியா கும்பல் தலைவனாக இருந்து அரசியல்வாதி ஆனவர்.

இந்நிலையில், ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் என்பவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும், 5 பேர் கொண்டகும்பல் உமேஷ் பாலை அண்மையில் சுட்டுக் கொன்றது. இதில், உமேஷை பாதுகாக்க முயன்ற காவலர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், ஒரு காவலர் உயிரிழந்ததுடன், மற்றொரு காவலர் படுகாயமடைந்தார்.

மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் பின்னணியில் அத்திக் அகமது இருப்பதாக உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளிப்படையாகவே குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.

இதனிடையே உமேஷ் பால்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அர்பாஸ் என்பவரை போலீஸார் அண்மையில் என்கவுன்ட்டர் செய்தனர். அடுத்தகட்டமாக உமேஷ் பால் கொலைவழக்கில் மற்றொரு குற்றவாளியான ஜாபர் அகமது வீட்டை பிரயக்ராஜ் நகர மேம்பாட்டு ஆணைய (பிடிஏ) நிர்வாகம் புல்டோசரை வைத்து இடித்து தரைமட்டமாக்கியது. மாபிய கும்பலின் தலைவனான அத்திக் அகமது நெருங்கி உதவியாளராக செயல்பட்டு வந்தவர் ஜாபர் அகமது.

புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்ட வீட்டில் அத்திக் அகமதுவின் மனைவி மற்றும் மகன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த பங்களாவில் போலீஸார் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிடிஏ துணைத் தலைவர் அர்விந்த் குமார் சவுகான் கூறுகையில், “விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் முன்னரே வழங்கப்பட்டது. இந்த கட்டடத்தின் மதிப்பு ரூ.2.5 கோடி’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.