ஐ.நா-வில் 'கைலாசா' பிரதிநிதிகள் – கலந்து கொண்டது எப்படி?!

நித்யானந்தா இந்தியாவின் பிரபலமான சாமியார்களில் ஒருவராக வலம் வந்தவர். பின்னர் வெளியான வீடியோ, அதை தொடர்ந்து கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் போன்ற சர்ச்சைகளில் சிக்கினார். அவரை கைது செய்வதற்கு போலீஸார் தீவிரம் காட்டினர். இவற்றில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் வகையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக சொல்லப்பட்டது.

நித்தியானந்தா

இதனிடையே மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கினார் என்றும், அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு, கொடியையும் வெளியிட்டார். மேலும் அரசியலமைப்பு, பாஸ்போர்ட், சின்னம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கிடையில் நித்யானந்தாவுக்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவலும் வெளியானது. ஆனால் அவரை பின்தொடர்வோர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான (CESCR) குழு நடத்திய விவாதத்தில், நித்யானந்தாவின் ‘கைலாசா’ பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். தன்னை விஜயப்ரியா நித்யானந்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிரதிநிதி, “கைலாசா என்பது இந்து மதத்தின் முதல் இறையாண்மை கொண்ட நாடு.

நித்தியின் கனவு கைலாசா!

இந்து மதத்தின் உயர்ந்த தலைவரான நித்யானந்தாவால் கைலாசா உருவாக்கப்பட்டது. நித்யானந்தா இந்து மதத்தின் மரபுகளை புதுப்பிக்கிறார். இந்து மதத்தின் பூர்விக மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையைப் புதுப்பித்ததற்காக எங்கள் தலைவர் நித்தியானந்த கடுமையான துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார்.

நித்யானந்தா மற்றும் கைலாசாவில் இருக்கும் புலம்பெயர்ந்த 20 லட்சம் மக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?. கைலாசா 150 நாடுகளில் தூதரகங்களை கொண்டிருக்கிறது. மேலும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் நிறுவியிருக்கிறது” என்றார்.

ஐ.நா

இதுஒருபுறம் இருக்க ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளில் கைலாசா இல்லை. எனினும் அதன் பிரதிநிதிகள் எவ்வாறு பங்கேற்றனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால் இந்த நிகழ்விற்குப் பதிவு செய்வதற்கான இணைப்பு சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான (CESCR) குழுவின் இணையதளத்தில் கிடைக்கிறது.

CESCR அலுவலகத்தின் வலைத்தளத்தின்படி, அது தற்போது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சி பற்றிய பொதுவான கருத்தை உருவாக்கும் பணியில் இருக்கிறது. 2020-ம் ஆண்டு முதல் பல ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பொதுக் கருத்தின் முதல் வரைவைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் குழுவின் ஆலோசனையின் இறுதி கூட்டத்தில் பிப்ரவரி- 24ம் தேதி விவாதம் நடைபெற்றிருக்கிறது. CESCR என்பது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை (ICESCR) செயல்படுத்துவதைக் கண்காணிக்கும் 18 சுயாதீன நிபுணர்களைக் கொண்ட அமைப்பாகும்.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேசஅனுமதிக்கிறது. இதை பயன்படுத்திதான் கைலாசா பிரிதிநிதிகள் பேசியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை தான், `தங்களுக்கு ஐ.நா அங்கீகாரம் அளித்துவிட்டது’ போன்ற தோற்றத்தை நித்யானந்தா ஆதரவாளர்கள்ஏற்படுத்தி வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.