லக்னோ, உத்தர பிரதேசத்தில் கொலை வழக்கில் சிக்கியுள்ள சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரின் உதவியாளர் வீடு, ‘புல்டோசர்’ வாயிலாக நேற்று இடிக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரயாக்ராஜில், கடந்த 2005ல் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ராஜு பாலை ஐந்து பேர் சுட்டுக் கொன்றனர்.
இவரை, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அதீக் அஹமது முன்விரோதம் காரணமாக கொன்றதாக கூறப்பட்டது. இந்தக் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் என்ற வழக்கறிஞர், சமீபத்தில் மர்ம கும்பலால் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக அதீக் அஹமது, இவரது மகன் ஆசாத் அஹமது மற்றும் சில உதவியாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, இரு தினங்களுக்கு முன் போலீசார் நடத்திய ‘என்கவுன்டரில்’ அர்பாஸ் என்ற குற்றவாளி கொல்லப்பட்டார். இந்த என்கவுன்டருக்குப் பின் அதீக் அஹமதுவின் உதவியாளரான ஜாபர் அஹமதுவின் வீட்டில் சோதனை செய்த போலீசார், பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின், இந்த வீடு புல்டோசர் வாயிலாக இடிக்கப்பட்டது.
உ.பி.,யில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, தங்களை எதிர்த்து போராடுபவர்கள் மற்றும் அரசியல் எதிரிகளின் வீடுகளை, புல்டோசர் மூலம் இடிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement