ஓமலூர்: குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவர்கள் குறித்து தகவல் தெரிவித்த உரிமையாளரை போலீசார் அபராதம் கட்ட சொல்லி ஆவணங்களை பறித்து வைத்ததால், லாரி உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (35). இவருக்கு சொந்தமான லாரியில், டெல்லியில் இருந்து பஞ்சு மூட்டை ஏற்றிக்கொண்டு, ஈரோடு வந்து கொண்டிருந்தனர். 5 நாட்களில் வர வேண்டியவர் 11 நாட்களாகியும் வராததால், லாரியில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் உரிமையாளர் கணேஷ்குமார் சோதனை செய்து உள்ளார். அப்போது, ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் லாரி நின்று செல்வதை கண்காணித்த கணேஷ்குமார், லாரி டிரைவர்களுக்கு போன் செய்து பேசியுள்ளார். ஆனால், அவர்கள் கணேஷ்குமார் சொல்வதை கேட்காமல், மது அருந்தியபடியே லாரியை ஓட்டி வந்துள்ளனர். கடந்த 28ம் தேதி லாரி தர்மபுரி மாவட்ட எல்லையில் செல்வதை அறிந்து, தொப்பூர் காவல் நிலையத்திற்கு கணேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், சேலம் மாவட்ட எல்லைக்குள் லாரி சென்று விட்டது. எனவே, அங்குள்ள தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தொப்பூர் போலீசார் தெரிவித்து, போன் நம்பரை கொடுத்துள்ளனர். உடனே, தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த லாரியை கண்டுபிடித்து போலீசார் சோதனையிட்டனர். பின்னர், போதையில் லாரியை ஓட்டியதாக வழக்குப்பதிந்து, டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் லாரியின் ஆவணங்களை போலீசார் பறித்துச் சென்றுள்ளனர்.பின்னர் லாரியின் உரிமையாளர் கணேஷ்குமார் வந்து, போலீசாரிடம் ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது, டிரைவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் லாரி டிரைவர்கள் மீது போடப்பட்ட வழக்கிற்கான அபராத தொகையை நீதிமன்றத்தில் கட்டிவிட்டு, ஆவணத்தை பெற்றுச் செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். ‘அவர்கள் மீது போடப்பட்ட வழக்கிற்கு நான் எப்படி அபராதம் கட்ட முடியும், அவர்களிடம்தான் நீங்கள் வசூலிக்க வேண்டும்’ என்று கூறியபோது, அவர்களை பிடித்து வருமாறு போலீசார் கூறியுள்ளனர்.
மேலும், டிரைவர் போதையில் வாகனம் ஓட்டினால், உரிமையாளர்தான் அபராதம் கட்ட வேண்டும். சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்திற்கு சென்று விளக்கம் கேளுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சிக்குள்ளான கணேஷ்குமார் மற்றும் லாரி உரிமையாளர்கள் சிலர் திரண்டு அன்றைய தினமே (பிப். 28ம் தேதி) ஓமலூர் நீதிமன்றம் முன் குவிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா உடனடியாக இன்ஸ்பெக்டரிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பேரில் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் ஓமலூர் போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களிடம் பேசினர். பின்னர், ஓமலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஆவணங்கள் அனைத்தும் லாரி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே மாற்று டிரைவர் ஏற்பாடு செய்து பஞ்சு லோடுடன் ஈரோட்டிற்கு லாரி அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, உரிய நேரத்தில் ரூ.10 ஆயிரம் அபராத தொகையை கட்டுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.