திருச்செந்தூரில் பரபரப்பு; டூவீலரில் பதுங்கிய பாம்பை இலகுவாக பிடித்த கல்லூரி மாணவர்: பொதுமக்கள் பாராட்டு

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் டூவீலரில் பதுங்கிய பாம்பை கல்லூரி மாணவர் இலகுவாக பிடித்து தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தார். அவரை பொதுமக்கள் பாராட்டினர். திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள மரத்தடியில் அவசர வேலைக்காக வெளியூர் செல்லும் உள்ளுர் வாசிகள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி செல்வது வழக்கம். அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தினுள் பாம்பு சென்றதாக அதை பார்த்தவர்கள் தெரிவித்தனர். உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது பாம்பு தென்படவில்லை. இதனைத்தொடர்ந்து அருகே உள்ள இருசக்கர வாகன பணிமனையில் இருந்து பழுது பார்ப்பவர்களை அழைத்து வந்து இருசக்கர வாகனத்தை கழட்டி பார்த்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வீரபாண்டியபட்டினம் எம்.எம்.தெருவை சேர்ந்த வின்சென்ட் ராயன் மகன் ஐசக் ராயன் (19) என்பவர் இருசக்கர வாகனத்தில் இருந்த இரண்டரை அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை எந்தவித உபகரணமும் இல்லாமல் கையால் இலாபகமாக பிடித்தார்.

இவர் பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் சேவியர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட நச்சு பாம்புகளை எளிதான முறையில் பிடித்ததாக தெரிவித்தார். இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை எளிதாக பிடித்த கல்லூரி மாணவரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர். அதன்பிறகு தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பாம்பை காட்டுப்பகுதியில் விட மாணவர் ஐசக் ராயனிடம் ஒப்படைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.