தோல்வி படத்தின் மீதி சம்பளத்தை வாங்க மறுத்துவிட்ட சம்யுக்தா

சமீபத்தில் தெலுங்கு, தமிழ் என தனுஷ் நடிப்பில் இரு மொழிகளில் வெளியான வாத்தி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா. தனது பெயரில் இணைந்து இருந்த மேனன் என்கிற சாதி பெயரையும் தான் பயன்படுத்த விரும்பவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி பாராட்டுகளையும் பெற்றார். அதேசமயம் வாத்தி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பட்டாம்பூச்சியாக பல இடங்களுக்கு பறந்து சென்று கலந்து கொண்ட சம்யுக்தா, மலையாளத்தில் அவரது நடிப்பில் சிறிய பட்ஜெட் படமாக உருவாகி இருந்த பூமராங் படத்தை கண்டு கொள்ளவில்லை என்றும் அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மறுத்துவிட்டார் என்றும் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் படத்தின் ஹீரோவும் புரமோஷன் நிகழ்ச்சியில் சம்யுக்தா மீது குற்றம் சாட்டினார்கள்.

ஒரு தயாரிப்பாளரின் கஷ்டத்தை அறிந்து கொள்ளாத நடிகை என்றும் தற்போது தமிழ், தெலுங்கில் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துக்கொண்டு இருப்பதால் மலையாள படங்களில் இனி தான் நடிக்கப் போவதில்லை என்று கூறி புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வராமல் புறக்கணித்ததாகவும் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் மலையாள திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான சோபியா பால் என்பவர் நடிகை சம்யுக்தா பற்றி தனது முகநூல் பக்கத்தில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது கடந்த நான்கு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் சோபியா பால் 'எடக்காடு பட்டாலியன் 06' என்கிற படத்தை தயாரித்தார். டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் சம்யுக்தா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் சம்யுக்தாவுக்கு பேசிய சம்பளத்தில் 65 சதவீதம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. சம்யுக்தா டப்பிங் பேச வேண்டிய சமயத்தில் பட வெளியீட்டுக்கு பிறகு மீதி பணத்தை தருவதாக தயாரிப்பாளர் சோபியா பால் கூறியுள்ளார். அதற்கு, “அதனால் என்ன சேச்சி. இது நம்ம படம் தானே” என்று பெருந்தன்மையுடன் டப்பிங் பேசி கொடுத்தார் சம்யுக்தா.

அந்த படம் வெளியாகி தோல்விப்படமாக அமைந்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து தயாரிப்பாளர் சோபியா பாலுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பிய சம்யுக்தா, “சேச்சி படம் சரியாக போகவில்லை என்று கேள்விப்பட்டேன். வருத்தமாக இருக்கிறது. உங்களுக்கு இந்த படம் மூலம் இன்னும் நஷ்டம் ஏற்படும் என்றும் எனக்கு தெரியும். அதனால் எனக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய மீதி சம்பளத்தை தர வேண்டாம். அப்படி நீங்கள் வற்புறுத்தி கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன்.. வேண்டுமென்றால் அதற்கு பதிலாக நாம் இன்னொரு பெரிய படத்தில் இணைந்து பணியாற்றுவோம்” என்று அதில் கூறியிருந்தார்.

“நான் அப்படியே பிரமை பிடித்து போய் அமர்ந்துவிட்டேன்” என்று கூறியுள்ள தயாரிப்பாளர் சோபியா பால், “அந்தப்படத்தை தயாரிப்பதற்கு முன் எட்டு படங்களை தயாரித்துள்ளேன். அதற்கு பின்னும் இரண்டு படங்களை தயாரித்துள்ளேன்.. ஆனால் என்னிடம் சம்பள விஷயத்தில் இப்படி நடந்து கொண்ட ஒரே நடிகை சம்யுக்தா மட்டுமே. குறிப்பாக டப்பிங் பேசுவதற்கு முன்பாகவே முழு சம்பளத்தையும் வாங்கிவிட துடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சம்யுக்தா ஒரு பாட புத்தகம்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் தயாரிப்பாளர் சோபியா பால்.

இப்படி தயாரிப்பாளரின் கஷ்டம் அறிந்து உதவும் ஒரு நடிகையான சம்யுக்தா ஏன் பூமராங் பட புரமோஷனில் கலந்துகொள்ளவில்லை..? எதனால் பூமராங் படக்குழுவினர் அவ்வாறு கூறினார்கள் என்பது தான் தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.