நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இருக்கிறது சூரியம்பாளையம். இந்த கிராமத்தில் உள்ள 7-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர், தன்னுடைய பழைய வீட்டை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புது வீடு கட்டுவதற்கு முயற்சி செய்திருக்கிறார். இதற்காக, தன் பழைய வீட்டை இடிக்கும் பணியை என்ஜினீயர் சங்கரிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், என்ஜினீயர் சங்கர், பழைய கட்டடத்தை இடிக்கும் பணியை, நெய்க்காரப்பட்டிபட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரிடம் கொடுத்திருக்கிறார்.
இந்த பணியை மாதேஸ்வரன், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வையப்பமலையைச் சேர்ந்த சுபாஷ் கோபி (30) என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறார். இதையடுத்து வேலைக்கு வந்த சுபாஷ் கோபி, முகப்பு கட்டட பகுதியை இடித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சுவரின் முன்பகுதி இடிந்து விழுந்ததில், நிலை தடுமாறி சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.

வலிதாங்காமல் அவர் அலறியதையடுத்து, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, சுபாஷ் கோபி சுவர் இடிபாடுகளுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். அதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த அவர்கள் திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயங்களுடன் இருந்த சுபாஷ் கோபியை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே சுபாஷ் கோபி இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து, திருச்செங்கோடு நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். சுபாஷ் கோபிக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், கிருஷ்விக் என்ற இரண்டு வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.