![]()
தூத்துக்குடியில் பைக் ரேஸில் ஈடுபட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால், அதனை மீட்க முடியாத விரக்தியில் 17 வயது சிறுவன் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பாக, சாத்தான்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் சென்ற வாகனத்தின் முன்பு, கெத்து காட்டுவதாக எண்ணி இரண்டு இளைஞர்கள் விலை உயர்ந்த பைக்கில் சாகசத்தில் ஈடுபட்டனர்.
இதனை கல்லூரி மாணவிகள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், வாகன ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இளைஞர்களை பிடித்து விசாரித்ததில், அதில் ஒருவன் அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அவன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சிறு சிறு வேலை பார்த்துக் கொண்டு சுற்றுத் திரிந்ததும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளில் ஒன்றிற்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் அதற்கு அபராதம் விதித்த போலீசார், அபராத தொகை செலுத்திய ரசிதை பெற்றுக் கொண்டு அந்த ஒரு பைக்கை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டனர். ஆனால், 17 வயது சிறுவனின் புதிய பைக் பதிவு செய்யப்படாமல் இருந்ததால் அதற்கு அபராதம் விதிக்க முடியாத நிலையில், பைக்கை பதிவு செய்துவிட்டு வந்து அபராதம் செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனிடையே, இடைத்தரகர்களாக செயல்பட்ட சிலர் போலீசாரிடம் இருந்து பைக்கை வாங்கித் தருவதாக கூறி, சிறுவனின் பெற்றோரிடம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 17 நாட்களுக்கு மேல் ஆகியும் பைக்கை திரும்ப எடுக்க முடியாததால் மன விரக்தியில் இருந்த சிறுவன் நேற்று மாலை தனது தோட்டத்தில் முருங்கை மரத்திற்கு அடிக்கக்கூடிய விஷமருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த சிறுவனின் சகோதரி பெற்றோரிடம் கூற, அவர்கள் உடனடியாக ராமச்சந்திரனை திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
பைக்கை கொடுக்காமல் போலீசார் இழுத்தடித்ததால் மன விரக்தியில் தங்களது மகன் தற்கொலை செய்துக் கொண்டதாக 17 வயது சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.