`மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு தாமதப்படுத்தி வருகிறது’ என தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சியினரும் சாடி வருகின்றனர். இந்த நிலையில், `2024-ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கும்’ என சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.1.2 கோடி மதிப்பில் கட்டணப் படுக்கை வசதியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், டீன் ரத்தினவேல், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ம.சுப்பிரமணியன், “சென்னையில் செயல்பட்டு வரும் இந்தத் திட்டம் முதல்வர் ஆலோசனைப்படி கோவை, சேலம், மதுரைக்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
சேலத்தில் 15 நாள்களுக்கு முன்பு கட்டணப் படுக்கை வசதி திறந்து வைக்கப்பட்டது. தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் 16 கட்டணப் படுக்கைகள் வசதி ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் இன்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஒரு நாளுக்கு சாதாரண அறைக்கு 1,200 ரூபாயும், குளிரூட்டப்பட்ட அறைக்கு 2,000 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படும்.
2021 ஜூலையில் திறந்து வைக்கப்பட்ட மூன்றாம் பாலின அறுவை சிகிச்சைப் பிரிவு, தென்னிந்தியாவில் அதிகப்படியான அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்திருக்கிறது. முன்பு அறுவை சிகிச்சை செய்ய மும்பை, தாய்லாந்துக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் 106 திருநங்கைகள் 126 திருநம்பிகளுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் 110 பேருக்கு முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

செயற்கை கருத்தரித்தல் மையம் சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகளில் விரைவில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் ரூ 2.5 கோடி செலவில் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மதுரை எய்ம்ஸ் மட்டுமே ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்தின் நிதி மூலம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டது. தொடர்ச்சியாக மத்திய அரசிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

2024 டிசம்பரில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2028 டிசம்பரில் இறுதியில் முடிவடையும். மதுரை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 5,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகை புரிகின்றனர். அவர்களின் வசதிக்காக கூடுதல் கட்டடம் அமைக்கப்பட்டு, அது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது” என்றார்.